நான் இந்த நாட்டுக்கு வரிசெலுத்துகின்றேன். சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் வரிசெலுத்துகின்றேன். அது மட்டுமல்ல, இது ஜனநாயக நாடு. இந்த நாட்டின் நல்லது கெட்டது என அனைத்திலும் எனக்கும் பங்கு இருக்கிறது. நான் கேட்கும் மொழியில் தகவலை அரசாங்கம் வழங்கவே வேண்டும். இப்படி நாமும் இலங்கையில் எமக்குத் தேவையான தகவலை பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் வழிப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அந்த அரிய சந்தர்ப்பத்துக்கு பெயர் தான் தகவலறியும் உரிமைச்சட்டம். சந்திரிகா அரசாங்கம் முதற்கொண்டு மைத்திரி அரசாங்கம் வரை இந்த சந்தர்ப்பம் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனாலும், மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டதும் எப்படியாவது சட்டமாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதன்படி 100நாள் செயல்திட்டம் முடிவடைந்து சுமார் 14 மாதங்கள் கழித்து ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. கயந்தவினால் இது சமர்ப்பிக்கப்பட்டாலும் இச்சட்டமூலத்துக்காக இரண்டுமுறை பாராளுமன்றில் போராடியவர் தற்போதைய சபாநாயகர் கருஜயசூரிய என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ பாராளுமன்றில் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்காக காத்திருக்கிறது தகவலறியும் சட்டமூலம். இந்த மாதமளவில் இது சட்டமாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக
நம்புவோம்.  ஆனால் இங்கு கவனத்தில் கொள்ளபபடவேண்டிய முக்கியமான விடத்தில் இந்த சட்டம் ஊடகத்துக்கானதல்ல. பொதுமக்களின் அடிப்படை உரிமை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் யார்வேண்டுமானாலும் அரசு மற்றும் அரச நிறுவனங்களை கேள்விகேட்க முடியும். அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தின்படியும் 14 ஆவது சரத்தின்படியும் இது மக்களின் அடிப்படை உரிமையனது என உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் மிகச்சிறந்த தகவலறியும் சட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் தகவலறியும் சட்டத்திற்கு நாட்டின் பிரதமர் முதல் சாதாரண குடிமகன்வரை கட்டுப்பட்டாக வேண்டும் என்பதுடன் அங்கு சிறந்த அனுபவமுள்ள தகவல் வழங்கும் ஆணைக்குழு மற்றும் தகவல் ஆணையாளர்களும் இருக்கின்றனர்.
தகவலறியும் சட்டத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகைமை குஜராத் தேர்தலில் மோடி தனது திருமணம் தொடர்பாக என்ன தகவலை வெளியிட்டுள்ளார், பிரியங்கா காந்தி எவ்வளவு பணம் கொடுத்து நிலம் வாங்கினார் காங்கிரஸ் தமது தேர்தல் பிரசாரத்துக்காக எவ்வளவு பணத்தை செலவு செய்தது மற்றும் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றபின் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எவ்வளவு செலவிடுகின்றார். மன்மோகன் சிங்கின் சொத்துவிபரம் போன்ற தகவல்கள் வெளிவந்தது.
இது மட்டுமல்லாமல்,  இந்தியாவில் பஞ்சாயத்தில் நடக்கும் ஊழல்  ரேஷன்கார்ட் எனப்படும் உணவுப்பொருள் மோசடி சுகாதார சேவை குளறுபடி கல்விச்சேவை மோசடிகள் பொதுப்போக்குவரத்தில் நடந்த மோசடி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கிய நிதிமோசடி என பல தகவல்கள் வெளிவரத்தொடங்கின. இவை சாதாரண மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டதோடு இந்த தகவல்களை கேட்டவர்களும் சாதாரண மக்களாகவே இருந்தனர். தகவலைக்கேட்கவென கல்வித்தராதம் எதுவும் விஷேடமாக தேவைப்படவும் இல்லை.
மேற்குறிப்பிட்ட விடயங்களோடு இந்தியாவில் கடந்த ஐந்து வருடத்தில் சுமார் 882 பழங்குடியினரின் பிள்ளைகள் இறந்துள்ள தகவலும் வெளிவந்து
நாட்டையே பரபரப்புக்குள்ளாகியது. இந்த தகவலானது ஒரு ஊடகவியலாளரினால் வெளிக்கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில் வறுமை சுகாதார சீர்கேடு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இந்திய அரசாங்கம் பழங்குடியினரின் சுகாதாரத்துக்காக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு இந்தியாவில் மக்கள் தமது அடிப்படை உரிமையை கேட்டு அதனால் அரசாங்கம் பல நலத்திட்டங்களையும் மேற்கொண்டுவருகிறது. அதேநேரம் எந்தெந்த தகவல்களையெல்லாம் பெறலாம் என்ற வரையறைகளையும் விதித்துள்ளது. அதேபோல இலங்கையில் உள்ள சட்ட மூலத்திலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தடைகள் அடங்கிய நீண்டதொரு பட்டியலொன்றையும் வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் ஊடுருவுவதையும், தேசிய பாதுகாப்புக்குக்
குந்தகம் ஏற்படுவதையும், இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படைவதையும், சர்வதேச ஒப்பந்தங்கள் பாதிப்படைவதையும், வெளிநாட்டு செலாவணி, வங்கித்துறை, வரி முறை, வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தேசிய பொருளாதாரம் பாதிப்படைவதையும், தனி நபர்களின் சுகாதார அறிக்கைகளை வெளியிடுவதையும், நம்பிக்கையின் பேரில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிடுவதையும், நீதிமன்ற அவதூறு ஏற்படக்கூடிய தகவல்களை வெளியிடுவதையும், பாராளுமன்றச் சிறப்புரிமைகளைப் பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதையும், பரீட்சைகளின் விபரங்களை வெளியிடுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டமூலம் கூறுகிறது.
ஆனால், இந்த தகவல்களுக்குள்ளேயே மற்றைய தகவல்கள் உள்ளடங்கியுள்ளன என்ற காரணத்தினால் இலங்கையில் இது நடைமுறைப்பிரச்சினைகளை எதிர்கொள்ளவாய்ப்புள்ளது. இந்தி சட்டத்தில் இத்தகைய கெடுபிடிகள் குறைவாக இருப்பதனை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாம் கேட்கும் தகவலை வழங்க மறுத்தால் அதற்கு எதிராக முறையிட முடியும் என்பதோடு, ஒழுக்காற்று அதிகார சபை விசாரணை நடத்தும். பின்னர் நீதிவான் விசாரணையின் பின்னர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால்,50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதமும், இரண்டு வருடச் சிறையும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைச்சட்டமூலம் சுட்டிக்காட்டியுள்ளது. தகவல்கள் கோரினால் அதனை வழங்குவதை மறுக்க முடியாது எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் பெற விண்ணப்பமொன்றை நிரப்ப வேண்டும் என்பதோ, ஆணைக்குழு முடிவு
செய்யும் கட்டணமொன்றையும் செலுத்த வேண்டும். தகவல் அறியும் சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதோடு, அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைப்படி ஜனாதிபதியினால் 5 பேர் இதற்கு நியமிக்கப்பட உள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம் ஒருவரையும் ஊடக அமைப்புகள் ஆசிரியர்கள் இணைந்து ஒருவரையும் சிவில் அமைப்புகள் ஒருவரையும் பரிந்துரைக்க அவகாசம் வழங்கப்படும்.அரசியல் கட்சி சாராத பாராளுமன்ற உறுப்பினராகவோ மாகாணசபை உள்ளூராட்சி சபை உறுப்பினராகவோ அல்லாத ஒருவரோ இதற்கு நியமிக்கப்பட முடியாது. ஆணைக்குழு 5 வருட காலத்திற்கு நியமிக்கப்படும். இந்த ஆணைக்குழுவானது ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கென தகவல் வழங்கும் அலுவலர் ஒருவரையும் நியமிக்கவுள்ளது. இந்த நியமனங்களில் தேசிய அளவு நியமனங்கள் என்று பரந்து சிந்தித்தால் யார் அந்த சிவில் பிரதிநிதி? நாட்டின் முழு சிவில் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவாரா? போன்ற பிரச்சினைகளும் கூறப்படுகின்றன. நல்லாட்சிக்கு இந்த சட்டம் மிக அவசியமான ஒன்றாக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளதின்படி இந்த சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் இருக்கவேண்டும். அதாவதுஇன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குத்தான் யுத்தத்தில் காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் நிவாரணம் என பல்வேறு தகவல்களை எதிர்ப்பார்கின்றனர். இந்த விடயங்கள் தேசியபாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் பேரில் வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிடுவதிலும் தொடர்புபடுகிறது.
இப்படியான சில விபரங்கள் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது. அதேநேரம் தகவல்களை வெளிப்படையாக தொழில்நுட்டபத்தினூடாக தரவுகளைக் காட்சிப்படுத்தல் என்ற விடயத்திலும் இலங்கை பிரச்சினையை எதிர்கொள்ளும். இணையத்தை பயன்படுத்தி எத்தனை பேரால் தகவலை அறியமுடியும்? இதுதவிர, இந்தியாவிலுள்ள சட்டத்தை விட இலங்கையிலுள்ள சட்டமூலம் சிறந்தது என இந்தியாவின் தகவலறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் லஞ்ச ஊழல் ஒழியவும் நமக்காக அரசு செய்யும் வேலைகளை தட்டிக்கேட்கவும் வரும் சட்டம்பற்றி நாமும் தெரிந்துகொண்டு உரிமையை பயன்படுத்துவோம்.

https://social.shorthand.com/ajsoorian/jCT8wRpwI0f/